ஓப்ஸ் நோடா காஸ் சோதனையின் வழி 84 பேர் கைது

ஜோகூர் பாரு: மே 12 முதல் மே 13 வரை ஓப்ஸ் நோடா காஸ் என்ற குறியீட்டுப் பெயரில் மாநிலம் தழுவிய ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஜோகூரில் எண்பத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

விபச்சார நடவடிக்கைகள், சமூக வருகை அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்துதல், செல்லுபடியாகும் பணி அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பெண்களை வேலைக்கு அமர்த்துதல், உரிமம் பெறாத வளாகங்களை இயக்குதல் ஆகியவற்றை ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

நாங்கள் கரோக்கி மையங்கள், பொழுதுபோக்கு விற்பனை நிலையங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய மையங்கள், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், மசாஜ் பார்லர்கள்  ஹோம்ஸ்டேக்களை குறிவைத்து சோதனை நடத்தியதாக  அவர் வியாழக்கிழமை (மே 15) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 84 பேரில், பல்வேறு குற்றப் பதிவுகளைக் கொண்டிருக்கும் 15  உள்ளூர் ஆடவர்கள், இரண்டு உள்ளூர் பெண்கள், ஆறு வெளிநாட்டு ஆண்கள்? 19 முதல் 55 வயதுடைய 61 வெளிநாட்டு பெண்கள் என்று குமார் கூறினார்.

மொபைல் போன்கள், பணம் செலுத்தும் ரசீதுகள், மைக்ரோஃபோன்கள், ஒலிபெருக்கிகள், தொலைக்காட்சிகள், ஆணுறைகள், மசாஜ் எண்ணெய்கள், துண்டுகள், டிஷ்யூக்கள், பணிப் பட்டியல்கள், வேலை நேர பஞ்ச் கார்டு இயந்திரம் ஆகியவற்றுடன் 8,553 ரிங்கிட் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார். கைப்பற்றப்பட்ட பொருட்கள் விசாரணை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று  குமார் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட 17 உள்ளூர்வாசிகள் மலேசிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் தடுப்புக்காவல் செய்யப்பட்டுள்ளனர் என்றும், 67 வெளிநாட்டினர் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருக்காததற்காகவும், பணி அனுமதி இல்லாமல் பணிபுரிந்ததற்காகவும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை மாநிலம் முழுவதும் விபச்சார மையங்களில் 97 சோதனைகளை நாங்கள் நடத்தியுள்ளோம். அதில் 383 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 70 பேர் உள்ளூர்வாசிகள்.  313 பேர் வெளிநாட்டினர் என்று அவர் கூறினார்.

குற்றம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் ஜோகூர் காவல் நிலைய ஹாட்லைனை 019-2792095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது செயல்பாட்டு மையத்தை 07-2212999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையர் குமார் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here