இன்று முதல் தலைநகரில் நடைபெறவுள்ள 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக பல்வேறு அமைச்சகங்கள், நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனநிறைவு அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், உச்சநிலை மாநாட்டை சுமூகமாக நடத்துவதற்கு அயராது உழைத்த அதிகாரிகள் செய்த தியாகங்களை மிகவும் பாராட்டுவதாகக் கூறினார்.
வெளியுறவு அமைச்சகம், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், பொருளாதார அமைச்சகம், நிதி அமைச்சகம், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட தளவாட ஏற்பாடுகளும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார். நான் மனநிறைவு அடைகிறேன். எல்லாம் நன்றாக நடக்கட்டும். அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சித்தோம். குறிப்பாக ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் (ஜிசிசி), சீனா சம்பந்தப்பட்டிருப்பதால் இது மிகவும் சிக்கலானது என்றார். இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக நிகழ்ச்சி நிரலை ஒருங்கிணைக்க கூட்டம் கூட்டப்பட்டது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், இளைஞர்- விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸார் அப்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மலேசியாவின் 2025 தலைமைத்துவ கருப்பொருளான ‘உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை’ இன் கீழ் நடைபெறும் 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, அதனுடன் தொடர்புடைய கூட்டங்கள், பிராந்திய ஒத்துழைப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு, புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உயர் மட்ட விவாதங்களுக்கு தென்கிழக்கு ஆசிய தலைவர்களை ஒன்றிணைக்கும்.
இதில் மியான்மர் தவிர அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களும் பங்கேற்பார்கள். தீமோர்-லெஸ்டே ஒரு பார்வையாளராக கலந்துகொள்வார்கள். அன்வார் தலைமையில் நடைபெறும் 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு காலநிலை மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிராந்திய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மலேசியா ஐந்தாவது முறையாக பிராந்திய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறது. இதற்கு முன்பு 1977, 1997, 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசியான் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. இந்த உச்சநிலை மாநாட்டுடன் இணைந்து, இரண்டு முக்கிய உயர்மட்ட ஈடுபாடுகள், அதாவது 2ஆவது ஆசியான்-ஜிசிசி உச்சி மாநாடு, தொடக்க ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சி மாநாடு ஆகியவை கூட்டப்படும். அவை பிராந்திய மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூலோபாய தளங்களாக செயல்படும்.









