கோலாலம்பூர்,
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான கடன் உத்தரவாத நிதியைமுறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் டான்ஸ்ரீ ஒருவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று விசாரணை செய்தது. அந்த டான்ஸ்ரீயிடம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நேற்றுக்கூறினார்.
நேற்றுக் காலை 9 மணிக்குத் தொடங்கிய வாக்குமூலப் பதிவு பகல் 3 மணிக்குதான் நிறைவு பெற்றது. இன்று வியாழக்கிழமை வாக்குமூலப் பதிவு நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீயின் உடல் நிலை காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அவருடைய வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று அஸாம் பாக்கி விவரித்தார். இதுவரை 52 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. டான்ஸ்ரீயும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும்அவர்களுள் அடங்குவர். இதே வாக்குமூலப் பதிவு இன்றும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலாக்காவில் உள்ள அந்த டான்ஸ்ரீயின் வீட்டிலும் எம்ஏசிசி அதிரடிச் சோதனை நடத்தியது. ஆனால் அங்கிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பல்வேறு சொத்துகளை எம்ஏசிசி கைப்பற்றியுள்ளது. அவற்றுள் விலைமதிப்புடைய கைப்பைகள், நகைகள், சொகுசு வாகனங்கள், விலைமதிப்புடைய கைக்கடிகாரங்கள், ரொக்கப் பணம், சொகுசு வீடு ஆகியவையும் அடங்கும்.








