உள் புற கிளினிக்குகளுக்கு ஆம்புலன்ஸ் பற்றாக்குறை – தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: சிவநேசன்

News by S.Lingeswaran

ஈப்போ, 

பேரா மாநிலத்தில் உள்ள உள் புற மற்றும் கிராமப் பகுதிகளில் செயல்படும் சுகாதார கிளினிக்குகளில் ஆம்புலன்ஸ் வாகன பற்றாக்குறை காணப்படுவதைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களைத் தோழமைப்பாகக் கொண்டுள்ள அவர், சிலிம் ரிவரில் அமைந்துள்ள குனோங் பெசவுட் கிளினிக்கிற்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கிய பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அந்த கிளினிக்கில் இருந்த பழைய ஆம்புலன்ஸ் கடந்த 2023ஆம் ஆண்டு பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அவசர சிகிச்சை தேவைகளுக்காக நோயாளிகளை சுலபமாக வெளியே கொண்டு செல்ல முடியாமல் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அந்த நிலையை அடிப்படையாக கொண்டு புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த கிளினிக், சிலிம் ரிவர் அரசு மருத்துவமனைக்கு வெகு தூரமாக உள்ளதால், ஆம்புலன்ஸ் வசதியின்றி பொதுமக்கள் பல்வேறு அவசர நிலைகளில் கடும் இடையூறுகளை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சனை சுகாதார அமைச்சு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் கவனத்திற்கும் வந்துள்ளது. இதனையடுத்து, தேவைகள் அடிப்படையில் கிளினிக்குகளுக்கு தேவையான ஆதரவை வழங்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என அ. சிவநேசன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பத்தாங் பாடாங் மாவட்ட சுகாதார இயக்குநர் டாக்டர் அனுராதா, பேரா மாநில தலைமை துணை இயக்குநர் விக்னேஸ்வரன் சின்னையா, தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here