வெள்ளிக்கிழமை, கிளந்தான், டோக் பாலியில் உள்ள கம்போங் பாரு நெலாயன் என்ற இடத்தில், முகமூடி அணிந்த பாராங் ஏந்திய குழுவினரால் தாக்கப்பட்ட ஒரு நபர் பலத்த காயமடைந்தார். இரவு 11.35 மணியளவில் நடந்த சம்பவத்தில், 25 வயதான பாதிக்கப்பட்டவரின் இடது முழங்கால், வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக கோஸ்மோ தெரிவித்துள்ளது.
பாசீர் பூத்தே காவல்துறைத் தலைவர் ஜைசுல் ரிசால் ஜகாரியா கூறுகையில், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபர்களின் நண்பர்களில் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் முன் இருந்தபோது, பலரால் தாக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த நபர் சிகிச்சைக்காக தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவரது கடுமையான காயங்கள் காரணமாக குபாங் கெரியனில் உள்ள யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்று அவர் கூறினார். ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற சந்தேக நபர்களை போலீசார் தேடி வருவதாகவும் ஜைசுல் கூறினார்.








