மியான்மரில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினை தடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஆசியான் நாடுகளுக்கு வலியுறுத்தினார். இருப்பினும் அத்தகைய தலையீடுகள் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டை மலேசியா தலைமையேற்று நடத்தி வருகிறது. மியான்மரில் ஏற்படும் முன்னேற்றங்களை வாராந்திர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார். உடனடி போர்நிறுத்தம், மனிதாபிமான உதவிக்கான அணுகல் உள்ளடக்கிய உரையாடல் (வெளியேற்றப்பட்ட சிவில் அரசாங்கத்திற்கும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் இடையில்) நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யவில்லை.
நல்லறிவு மேலோங்க வேண்டும். இல்லையெனில், நாடு அழிவிற்கு செல்லும். வறுமை (ஏற்கெனவே) அதிகரித்து வருவதோடு அமைப்பின் நோக்கம் தோல்வியடைகிறது என்று அவர் இன்று ஹில்டன் கோலாலம்பூரில் நடந்த 38ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசைக் கூட்டத்தில் கூறினார். ஆசியான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்காதது “வெட்கக்கேடானது” என்று அன்வார் மேலும் கூறினார். இருப்பினும் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் மற்ற நாடுகளின் ஈடுபாட்டை அவர் வரவேற்றார்.
மியான்மரில் நிலவும் அமைதியின்மை அதன் எல்லைகளைத் தாண்டி பரவியுள்ளது என்றும் மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம் போன்ற நாடுகள் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி 2021 இல் ஆங் சான் சூகி தலைமையிலான சிவில் அரசாங்கத்தை இராணுவ ஆட்சிக்குழு கவிழ்த்ததிலிருந்து மியான்மர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. சூ கீ வீட்டுக் காவலில் இருக்கிறார்.
மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 3,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், இராணுவ ஆட்சிக்குழு தலைமையிலான நிர்வாகத்திற்கும் நிழல் தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கும் (NUG) இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்கு அன்வார் மத்தியஸ்தம் செய்தார்.









