மலாக்கா: இந்த ஆண்டு ஜனவரி முதல் மலாக்கா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஏழு வீடு திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் கூறுகையில், 24 மற்றும் 31 வயதுடைய இருவரும் ஜூன் 4 ஆம் தேதி பேராக்கின் கோல கூராவில் கைது செய்யப்பட்டனர்.
மே 28 அன்று, மலாக்கா தெங்கா மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக இரண்டு புகார்கள் போலீசாருக்கு வந்தன. இருவரும் வேலையில்லாமல் இருக்கும் தம்பதியர் இதில் தொடர்புடையவர்கள். அவர்களின் செயல்பாட்டில் ஹோம்ஸ்டேக்களை குறிவைத்து பல்வேறு மின் சாதனங்கள், தளவாடங்களைத் திருடுவதும் அடங்கும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முதல்கட்ட விசாரணையில் அவர்கள் மலாக்கா தெங்காவில் மூன்று வீடு புகுந்து கொள்ளை வழக்குகளிலும், கோலாலம்பூர், சிலாங்கூரில் மேலும் நான்கு வழக்குகளிலும் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டது. மின்சார உபகரணங்கள், வீட்டு தளவாடங்கள், ஒரு தங்க வளையல், இரண்டு கார்கள், ஐந்து அடகுக்கடை ரசீதுகள் ஐந்து மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைகள் நடந்து வருவதாகவும், வீடு புகுந்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457, கொள்ளைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.









