ஜூலை 8 முதல் 11 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெறவிருக்கும் 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது (58ஆவது AMM) கோலாலம்பூரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்மா புத்ராவில் உள்ள ஆசியான் பிரதான தளவாடச் செயலகம், KLCC பகுதியிலிருந்து 1 கிமீ சுற்றளவும் மேலும் முக்கிய நுழைவுப் புள்ளிகளை இணைக்கும் முக்கிய சாலைகள் நெடுஞ்சாலைகளில் இந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் போக்குவரத்து இடையூறுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட வழித்தடங்கள், சில சாலைகள் மூடப்படுவது குறித்த கூடுதல் தகவல்களை ராயல் மலேசியா காவல்துறை (PDRM) விரைவில் அறிவிக்கும்.
ஏற்படக்கூடிய அனைத்து சிரமங்களுக்கும் வெளியுறவு அமைச்சகம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. மேலும் பொதுமக்களின் புரிதலும் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று செயலகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு முக்கியமான பிராந்திய நிகழ்வை நடத்தும் நாடாக, பொதுமக்களின் நலனை புறக்கணிக்காமல் நிகழ்வை சீராகவும் வெற்றிகரமாகவும் ஏற்பாடு செய்வதை உறுதி செய்வதற்கு வெளியுறவு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி லாவோஸிடமிருந்து ஆசியான் தலைமையை மலேசியா ஏற்றுக்கொண்டது. மேலும் நாடு ஆசியான் தலைமையாக பணியாற்றுவது இது ஐந்தாவது முறையாகும். அதன் முந்தைய பதவிக்காலம் 1977, 1997, 2005,2015 ஆகும்.








