MATRIX கொன்செப்ட்ஸ் ஏற்பாட்டில் ஆசியான் – மலேசியா பொருளாதார – ஊக்குவிப்பு மாநாடு

News by K.Kalai

சிரம்பான்,

மெட்ரிக்ஸ் கொன்செப்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஏற்பாட்டில் இங்கு பண்டார் ஸ்ரீ செண்டாயான் டி தெம்பாட் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற மலேசிய விஷன்ஸ் வேலி 2.0 தேசியப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வந்த ஆசியான் – மலேசியா முதலீடு 2025 பேராளர் குழுவை வரவேற்றதில் பெரும்மகிழ்ச்சி அடைந்தது. இந்தத் தேசியப் பொருளாதார வியூக மாநாடானது நெகிரி செம்பிலானில் தொழில்துறை வளர்ச்சியையும் நிலைத்தன்மைமிக்க மேம்பாட்டையும் கொண்டு வருவதற்காக மே பேங்க் முதலீட்டுப் பிரிவு எம்எஸ் கார்ப்பரேஷன் – இன்வெஸ்ட் நெகிரி செம்பிலான் ஆகிய துறைகளுடன் இணைந்து இந்த மாநாட்டை மெட்ரிக்ஸ் கொன்செப்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இன்வெஸ்ட் மலேசியா 2025 என்பது நாட்டின் முதன்மையான முதலீட்டு நிகழ்ச்சியாகும். இதில் 150 உயர்நிலை நிதி நிர்வாகிகள், ஆய்வாளர்கள், நிதி, மூலதனச்சந்தை முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மெட்ரிக்ஸ் கொன்செப்ட்ஸ் உயர்நிலைத் தலைமைத்துவப் பொறுப்பாளர்கள், நெகிரி செம்பிலான் மாநிலத் தொழில்துறை, இஸ்லாம் அல்லாதார் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் தியோ கொக் சியோங், என்எஸ் கார்ப்பரேஷன், இன்வெஸ்ட் என்எஸ், நெகிரி செம்பிலான் செமி கொன்டக்டர் வேலி ஆகிய தரப்புகளின் முக்கியப் பொறுப்பாளர்களும் பங்கேற்றிருப்பது சிறப்புக்குரியது என்று மெட்ரிக்ஸ் கொன்செப்ட்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கெல்வின் லீ கூறினார். 

நெகிரி செம்பிலானில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காண முடிகிறது. இந்த வட்டாரத்தின் உருமாற்றம் பெற்ற வளர்ச்சியை நெகிரி செம்பிலான் காணும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. நட்புறவான முதலீட்டு சூழ்நிலையை நெகிரி செம்பிலான் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். பண்டார் ஸ்ரீ செண்டாயானில் இன்வெஸ்ட் மலேசியா 2025 பேராளர்களை வரவேற்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம். மலேசிய விஷன்ஸ் வேலி 2.0 திட்டம் வெற்றிபெறும் சாத்தியக்கூறுகளை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்று கெல்வின் லீ மேலும் சொன்னார்.

எம்விவி 2.0 தனியார்துறைத் தலைவர்களுடன் இணைந்து மாநில அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய திட்டமாகும். தேசியப் பொருளாதார வளர்ச்சியில் நெகிரி செம்பிலானை உருமாற்றும் ஒரு முக்கியத் திறவுகோலாகவும் இத்திட்டம் அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே மாநில அரசாங்கம், மெட்ரிக்ஸ் கொன்செப்ட்ஸ் போன்ற தனியார்துறை இடையிலான வலுவான ஒத்துழைப்பானது எதிர்கால முதலீட்டுக்கான எழுச்சிமிக்க ஓர் அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தியோ கொக் சியோங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here