ஈப்போவில் ஒருவரின் மரணம் அனைத்துலக கும்பலுடன் தொடர்புடையது: போலீசார்

ஜூன் 24 அன்று ஈப்போவின் தாமான் தாசேக் டமாயில் உள்ள அவரது வீட்டில் மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஒருவரின் மரணம், அனைத்துலக தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையது என்று போலீசார் நம்புகின்றனர்.

போலீசார் ஆரம்பத்தில் நம்பியதை விட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் அதிக தொடர்புகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு எல்லை தாண்டிய குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும் என்றும் பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

வழக்கில் ஆரம்பகால சந்தேக நபரான பாதிக்கப்பட்டவரின் 31 வயது மகன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நூர் ஹிசாம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தானே இந்த கும்பலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. (சர்வதேச நிறுவனங்கள்) ஆசியானாபோல் மற்றும் இன்டர்போல் ஆகியவற்றை காவல்துறை விசாரணை உள்ளடக்கும் என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான்  செய்தி வெளியிட்டிருந்தது.

மாநில காவல்துறை இந்த வழக்கின் விசாரணையை புக்கிட் அமானின் குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார். தந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்ட மகன் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டதாக நூர் ஹிசாம் கூறினார்.

50 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவரின் சமையலறையில், வயிற்றின் வலது பக்கத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும், மார்பின் வலது பக்கத்தில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டன. சுத்தம் செய்யப்பட்டு சமையலறை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த 22 செ.மீ நீளமுள்ள கத்தி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இது மரணத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. குற்றப் பின்னணி இல்லாத மகன் ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டார். கொலை குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக ஜூலை 1 வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here