ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – மேலும் பலர் சிக்கியிருப்பதால் அச்சம்

ராஞ்சி,ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலக்கரி சுரங்கமானது உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதே சமயம், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here