கெர்லிங் பகுதியில் உள்ள ஒரு பண்ணை அருகே மோட்டோசைக்கிளில் சென்றபோது, மாடு திடீரென அடித்ததைத் தொடர்ந்து, பாலத்திலிருந்து கீழே விழுந்த 53 வயதுடைய மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. சம்பவத்தின்போது கடுமையாக காயமடைந்த நிலையில் அவரை கண்டெடுத்தனர். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பிரண்டு இப்ராஹிம் ஹுசைன் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாடு பாதிக்கப்பட்டவர் சென்ற மோட்டோசைக்கிளை நோக்கி நகர்ந்து, அதனை அடித்தது பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் அவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததாக உறுதி செய்யப்பட்டது.
மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயரத்தில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான காயமே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.









