கோலாலம்பூர்,
மலேசியர்கள் டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் டிஜிட்டல் அமைச்சு வழங்கும் இலவசப் பயிற்சிகளில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
அமைச்சின் கீழ் இயங்கும் மை டிஜிட்டல் கார்ப்பரேஷன் இந்தப் பெரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன் வழி மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு உலகளாவிய நிலையில் போட்டி ஆற்றல்மிக்கவர்களாகவும் திகழ முடியும் என்று அவர் கூறினார்.

இந்திய சமுதாயம் குறிப்பாக இளைஞர்கள் இந்த வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், நாடு தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம்தான் நாட்டில் எதிர்காலம் என்பதை இந்திய சமுதாயம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு ஒரு சாராருக்கு மட்டுமல்ல அனைத்து நிலை மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசாங்கத்தோடு தனியார் நிறுவனங்களும் பங்கேற்றிருப்பது இத்துறையின் முக்கியத்துவத்தை இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ராக்யாட் டிஜிட்டல் என்பது அரசாங்கத்தையும் சைபர் செக்கியூரிட்டி மலேசியா இன்டல் ஐடிரெய்ன், மைக்ரோசாஃப்ட், டிரெய்னோகேட் போன்ற தொழில்துறை கூட்டமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெருமுயற்சியாகும். இந்த முயற்சியில் துறைசார் வல்லுநர்களும் அரசாங்க உயர் அதிகாரிகளும் இணைந்து செயல்படுவர். இவர்கள் வழங்கும் இலவசப் பயிற்சிகளில் மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் பங்குபெற்று பயன்பெற வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டார். மேலதிகத் தகவல்களுக்கு: rakyatdigital.gov.my என்ற அகப்பக்கத்தை நாடலாம்.










