நிபோங் தெபால்,
இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தமிழ் மொழி, இன, சமய மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் தமிழ் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களும், முன்னாள் மாணவர் சங்கங்களின் பொறுப்பாளர்களும் சமூக சேவைகளில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவையின் தலைவர் தர்மன் ஆனந்தன் தெரிவித்தார்.

நிபோங் தெபால் வட்டாரப் பேரவையின் சமயப் பிரிவினர் ஏற்பாடு செய்த அன்னையர் – தந்தையர் தினக் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதைத் தெரிவித்தார். சமுதாயத்தில் ஒழுங்கான ஒற்றுமையும் ஆன்மிக ஒளியுமுள்ள தலைமுறையை உருவாக்க சமயக் கல்வி முக்கியமான பங்காற்றுவதாகவும், சமூக சேவையின் மதிப்பையும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைப்பது அவசியமாகவும் அவர் கூறினார்.

அன்னையர் மற்றும் தந்தையரின் அன்பும், தியாகமும், வழிகாட்டுதலும் குறிக்கோளாக கொண்ட இந்த நிகழ்வில், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவையின் சமயப் பிரிவுத் தலைவர் திருமதி பி. பூங்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வை மறக்கமுடியாத சிறப்பாக மாற்றிய நிபோங் தெபால் சமயப் பிரிவுத் தலைவர் செல்வி துரைசாமி, அவரது செயலவை உறுப்பினர்கள், அர்ப்பணிப்பு மிக்க தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தர்மன் ஆனந்தன் தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும், கலிடொனியா தோட்டத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னை மகா முத்து மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினர் விழாவின் வெற்றிக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு, ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாகவும் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.







