குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேரும், வெளியில் இருந்து 19 பேரும் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் “அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சர்வதேச நேரம் 08:08:39-க்கு (இந்திய நேரம் 13:08:39) விமானம் மேலே எழும்பியது. 08:08:42 மணிக்கு அதன் அதிகபட்ச வேகமான 180 நாட்டை எட்டியது.
உடனடியாக என்ஜின் 1 மற்றும் 2-க்கான எரிபொருள் ‘கட்ஆப்’ சுவிட்சுகள் ‘ரன்’ நிலையில் இருந்து ‘கட் ஆப்’ நிலைக்கு மாறிவிட்டன.
அதாவது விமான நிலையத்தில் இருந்து விமானம் கிட்டத்தட்ட மேலே எழும்பிய உடனேயே என்ஜின்களை அணைக்க பயன்படுத்தப்படும் எரிபொருள் கட்டுப்பாட்டு ‘சுவிட்சு’கள் இரண்டும் ஒரு வினாடி இடைவெளியிலேயே ‘ரன்’ நிலையில் இருந்து ‘கட் ஆப்’ நிலைக்கு சென்றன.
அப்போது விமானிகளில் ஒருவர் மற்றவரிடம், ‘ஏன் எரிபொருளை கட்-ஆப் செய்தாய்?’ என கேட்கிறார். அதற்கு மற்றவர், ‘நான் அப்படி செய்யவில்லை’ என மறுக்கிறார். இது காக்பிட் குரல் பதிவு கருவியில் பதிவாகி இருந்தது.
இவ்வாறு எரிபொருள் சுவிட்சுகள் கட்ஆப் நிலைக்கு சென்று, என்ஜின் செயலற்ற நிலைக்கு சென்று கொண்டிருந்ததால் ைஹட்ராலிக் சக்தி வினியோகிக்கும் ‘ராட்’ செயல்படுத்தப்பட்டது.
விமானம் மேலே எழும்பிய உடனேயே இது செயல்படுத்தப்பட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதன் மூலம் என்ஜின் செயலிழப்பு உறுதியாகிறது.
பின்னர் 10 வினாடிகளுக்குப்பின் முதல் என்ஜினுக்கான கட்ஆப் சுவிட்ச் ரன் நிலைக்கு மாற்றப்பட்டது. பின்னர் 4 வினாடிகள் கழித்து 2-வது என்ஜினுக்கான சுவிட்ச், ரன் நிலைக்கு மாற்றப்பட்டு என்ஜின்களை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது.
ஆனால் முதல் என்ஜின் மட்டும் சற்றே மீண்ட நிலையில், 2-வது என்ஜின் போதிய சக்தியை மீண்டும் வழங்க தவறியது. அப்போது விமானிகளில் ஒருவர், ‘மே டே’, ‘மே டே’, ‘மே டே’ என அவசர கால அழைப்பை விடுத்தார். இதைக்கேட்டு விமான கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் பதில் நடவடிக்கை எடுப்பதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. விமான நிலைய சுற்றுச்சுவருக்கு வெளியே மரங்களில் மோதி மாணவர் விடுதியில் விழுந்து நொறுங்கி விட்டது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 737, 787 விமானங்களின் எரிபொருள் ஸிவிட்ச் லாக்கிங் சிஸ்டத்தை வருகிற 21ஆம் தேதிக்குள் முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என டிஜிசிஏ அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.