பி.ஆர்.ராஜன்
நாட்டில் பேச்சு, கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் அதற்கு ஓர் எல்லையும் கட்டுப்பாடும் உண்டு. வரம்பு மீறும் போது தான் சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
3 ஆர் (3R) என்ற இனம், சமயம், அரச பரம்பரை பற்றி பேசுவது, விமர்சனம் செய்வது மிகப் பெரிய குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
தைப்பூசம், காவடி சிந்து, காவடி ஆட்டம் பற்றி இழிவாகவும் அவதூறாகவும் விமர்சனம் செய்யப்பட்ட காணொலி வைரலாகி இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்பதற்காக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) உடனடியாக அவற்றை நீக்கியது.
அது மட்டுமன்றி சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்து தண்டனையும் விதிக்கப்படுவதற்குவகை செய்தது. இந்த விவகாரத்தில் இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நிஜமான கணக்கை பயன்படுத்தியதால் எம் சி எம் சி அவர்களை எளிதில் அடையாளம் கண்டது.
அதேசமயம் போலி கணக்குகளின் திரைக்குப் பின்னால் ஒளிந்துக் கொண்டு ஆபத்து நிறைந்த சர்ச்சைக்குரிய விமர்சனங்களையும் கருத்துக்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அப்பதிவுகளை MCMC விரைந்து நீக்கிவிடுகிறது.
MCMC இதைச் செய்வதற்குரிய அதிகாரத்தை பெற்றிருக்கிறது. உடனடியாக நீக்குவதன் மூலம் தீய நோக்கத்திலான அந்த பதிவுகள் மிகப் பரவலாக பரவுவது தடுக்கப்படுகிறது.
குற்றவியல் சட்டம் (பீனல் கோட்) பிரிவு 504, 505 (b) (அவதூறு), நிந்தனை சட்டம் இந்தப் பதிவுகளை விசாரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது.
அண்மைய சில தினங்களாக ‘கோவில் ஹராம்’ (Kuil Haram) என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் போலி கணக்குகளை பயன்படுத்துவதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அப்திவுகளை விரைந்து நீக்குவதில் MCMC அதிரடியாக களம் இறங்கி இருக்கிறது.
இனப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மிகக் கடுமையான குற்றச் செயலாக MCMC பார்க்கிறது. இதற்கு மற்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு பதில் விமர்சனங்களை பதிவேற்றம் செய்துவிடக் கூடாது.
பதிலுக்குப் பதில்; அவதூறுக்கு அவதூறு என்று இறங்கி பொது அமைதிக்கு கேடு விளைவித்து விடக்கூடாது. இது சரியான தீர்வாகவும் இருந்து விடாது.
நாட்டில் அமைதியும் சுபிட்சமும் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு மலேசிய மடானி அரசாங்கம் MCMC மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்கள் மற்றவர்களுக்கு சினமூட்டி பொது அமைதிக்கு மிரட்டல் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக எம் சி எம் சி அதன் தொடர்பான சமூக ஊடக பதிவுகளை உடனடியாக நீக்குவதோடு மட்டும் அன்றி சம்பந்தப்பட்டவர்களை வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்வதோடு போலீஸ் புலன்விசாரணைக்கும் பரிந்துரை செய்கிறது.
மொத்தத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்று மக்களுக்கு ஒரு படிப்பினையை தரும் வகையில் மிகக் கடுமையான நடவடிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் MCMC மூலம் எடுத்து வருகிறது.




















