கார் – டிரெய்லர் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

குவா மூசாங்கில் உள்ள ஜாலான் உத்தாமா, ஃபெல்டா சிகு 1 இல் இன்று காலை கார் டிரெய்லர் லோரியுடன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் படுகாயமடைந்தார். காலை 9.07 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, குவா  மூசாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். காலை 9.34 மணிக்கு நாங்கள் வந்தபோது, ஹோண்டா கார் ஒன்று டிரெய்லர் லோரியுடன் மோதியதில், காருக்குள்  ஐந்து பேர் சிக்கிக் கொண்டதைக் கண்டறிந்தோம்.

லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். காரை ஓட்டி வந்த ஒரு பெண் ஆபத்தான நிலையில் இருந்ததோடு இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர்  சிக் சூன் ஃபூவை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.  மேலும் காயமடைந்த ஓட்டுநர் குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here