ஜாரா கைரினா மரணம்: Tik Tok கணக்கில் தவறான தகவல் பரப்பியதாக PDRM விசாரணை

கோலாலம்பூர்,

பள்ளி மாணவி ஜாரா கைரினா மஹாதீர் (13) மரணம் தொடர்பாக தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் @berjuanguntukzara என்ற TikTok கணக்கை  PDRMவிசாரித்து வருகிறது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் எம். குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த கணக்கில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடிய பல பதிவுகள் இடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகள், விசாரணையின் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, பொதுமக்கள் ஆருடங்கள் அல்லது தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விசாரணை, 1948-ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4(1), குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(பி), 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் நடைபெற்று வருகிறது. இச்சட்டங்கள், கணினி வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல், பொதுமக்களிடையே அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டுதல் போன்ற குற்றங்களை உள்ளடக்கியவையாகும்.

ஜூலை 16ஆம் தேதி, சபாவின்  ஒரு மதப் பள்ளி விடுதியின் மூன்றாம் தளத்திலிருந்து விழுந்த நிலையில் ஜாரா கைரினா மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அடுத்த நாள் மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்.

அவரது மரணம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் bullying சம்பவங்களுடன் தொடர்புபடுத்திய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை AGC, ஜாரா மரணத்தின் காரணங்களையும் சூழ்நிலைகளையும், குற்றச்செயல் இடம்பெற்றதா என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்படுமென அறிவித்தது.

காவல்துறை, திட்டமிட்டு போலி தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here