கோலாலம்பூர்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக சுங்கை பட்டாணியில் மருத்துவ ஆலோசனையோ, சிகிச்சையோ இல்லாமல் போலி மருத்துவச் சான்றிதழ்கள் (MC) விற்பனை செய்த குழுவின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் போலீசாரா ல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்த நிலை போலீஸ் ஊழியரின் ஒழுக்கக்கேடுகளை விசாரிக்கும் போது இந்த போலி சான்றிதழ் விற்பனை வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஹன்யான் ரம்லான் கூறினார்.
ஜூன் 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தாமன் சோங்கெட் இந்தாவில் உள்ள ஒரு இடத்தில் நடந்த சுற்றிவளைப்பில், சுமார் 20 போலி எம்.சிகளும், மருந்து மாத்திரைகள், டாக்டர்களின் பெயருடன் ரப்பர் ஸ்டாம்புகள், A4 தாள், லேப்டாப் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூவர் வேலை இல்லாதவர்கள் என்றும், அவர்களின் வயது 30 முதல் 40 இடையில் இருக்கிறது என்றும் ஹன்யான் தெரிவித்தார். இவர்கள் தினமும் RM25 முதல் RM30 வரை வசூலித்து, அரசு ஊழியர்களை முக்கிய வாடிக்கையாளர்களாக வைத்திருந்ததாகவும் கூறினார்.
முக்கிய குற்றவாளி இதயம் தொடர்பான சிகிச்சை பெற்று வரும் நபர் என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மருத்துவர்களின் பெயர்களை பதிவு செய்து, அவற்றை போலி ஸ்டாம்பில் பயன்படுத்தியிருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.





















