அபுதாபி: ஆசிய கோப்பை முதல் லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 94 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி–20’ தொடர் நேற்று துவங்கியது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அபுதாபியில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் ஜோடி துவக்கம் தந்தது. ஷுக்லா வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் ரஹ்மானுல்லா சிக்சர் அடித்தார். அடுத்த பந்திலும் சிக்சருக்கு ஆசைப்பட்ட இவர், 8 ரன்னில் நிஜகத் கானிடம் ‘பிடி’ கொடுத்தார். இப்ராஹிம் ஜத்ரன், 1 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 6 ஓவரில் (‘பவர் பிளே’), 41/2 ரன் எடுத்தது.
பின் செதிகுல்லாவுடன், 40 வயது ‘சீனியர்’ முகமது நபி இணைந்தார். அஜாஸ் கான் வீசிய போட்டியின் 7வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என விளாசினார் முகமது நபி. மீண்டும் வந்த அஜாஸ் கான் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். முகமது நபி 26 பந்தில் 33 ரன் எடுத்த நிலையில் கின்சிட் ஷா வீசிய பந்தில் அவுட்டாகினார்.









