ஈப்போ,
ஒரு உணவக உரிமையாளர் நேற்று இரவு செமோர், ஜாலான் சிலாங் 3-ல் அமைந்துள்ள தனது கடையில் meat grinderஇல் வலது கை சிக்கியதால் கடுமையாகக் காயமடைந்தார்.
இரவு 8.17 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தமக்கு தகவல் வந்ததை அடுத்து, மேரு ராயா தீயணைப்பு நிலையத்திலிருந்து (BBP) ஒரு குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது என பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் மொகமட் ஹனாபியா தெரிவித்துள்ளார்.
41 வயதான அந்த நபர் மீன் துண்டுகளை அரைப்பதற்காக இயந்திரத்தை பயன்படுத்தியபோது வலது கை சிக்கிக்கொண்டது.
“எங்கள் பணியாளர்கள் அங்கு சென்றபோதும் பாதிக்கப்பட்டவரின் கை இன்னும் இயந்திரத்திற்குள் சிக்கியிருந்தது. அவர் கடுமையான வலியில் அவதியுற்று இருந்ததால் உடனே சுகாதார அமைச்சின் (MOH) மருத்துவ குழு அழைக்கப்பட்டு, கைக்கு மயக்க மருந்து செலுத்திய பிறகு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் கூறினார்.
சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்து மருத்துவக் குழுவினர் மயக்க மருந்து அளித்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி இயந்திரத்தின் அடிப்பகுதியைத் திறந்து, அரைப்பான் கியரை எதிர்மறை திசையில் சுழற்றியதன் மூலம் கையை விடுவித்தனர் என்கிறார் அவர்.
பாதிக்கப்பட்டவரின் வலது கையின் நான்கு விரல்கள் கடுமையாகக் காயமடைந்தன. அவர் பின்னர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவர் தெரிவித்தார்.















