கோலாலம்பூர்: சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றில் மலேசியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அனைத்துலக சமூகப் பாதுகாப்பு சங்க உலக சமூகப் பாதுகாப்பு மன்றத்தின் போது இந்தியாவின் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்குடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
மன்றத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக மலேசியாவை டாக்டர் மண்டாவியா வாழ்த்தினார். தொழில்முறை, திறமையான தொழிலாளர்கள் மூலம் மலேசியாவின் தொழிலாளர் சந்தைத் தேவைகளை ஆதரிக்க இந்தியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
இரு தலைவர்களும் இந்தியா-மலேசியா கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதோடு தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான வலுவான ஆற்றலைக் கண்டறிந்தனர்.
இந்தியாவின் அரசு ஊழியர் காப்பீட்டுக் கழகத்திற்கும் மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கும் இடையிலான முன்மொழியப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் முன்னேற இந்தியா தனது தயார்நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
பெர்கெசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமதுவை டாக்டர் மாண்டவியா சந்தித்து, இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு கவரேஜின் விரைவான விரிவாக்கத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு கவரேஜ் 2015 இல் 19% இலிருந்து 2025 இல் 64% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதனால் 940 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்.
உலகளாவிய சிறந்த நடைமுறைக்கான மாதிரிகளாக ISSA வரவேற்ற இ-ஷ்ரம், தேசிய தொழில் சேவை போன்ற தளங்கள் மூலம் இந்தியாவின் டிஜிட்டல்-முதல் அணுகுமுறையை அமைச்சர் குறிப்பிட்டார்.









