இந்துார்: பெண்கள் உலக கோப்பை லீக் போட்டியில் பிரிட்ஸ் சதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இந்துாரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மரிஜானே காப் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் சுசீ பேட்ஸ் (0) அவுட்டானார். அமெலியா கெர் (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஜார்ஜியா (31), கேப்டன் சோபி டெவின் ஜோடி ஆறுதல் தந்தது.
அடுத்து வந்த புரூக் ஹாலிடேவுடன் இணைந்த டெவின் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது மிலாபா பந்தில் ஹாலிடே (45) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய டெவின், 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் 231 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் மிலாபா 4 விக்கெட் கைப்பற்றினார்.









