சிங்கப்பூரின் தரவு நிலையங்களை ஈர்க்க முனையும் ஜோகூரின் ‘StepWest’

ஜோகூர் பாரு:

சிங்கப்பூரில் நில விலை உயர்வும் இடநெருக்கடியும் அதிகரிப்பதால், அங்குள்ள தரவு நிலையங்கள் மற்றும் தளவாட நிறுவனங்கள் ஜோகூரில் உள்ள இப்ராகிம் டெக்னோபொலிஸ் தொழிற்பேட்டைக்குட்பட்ட செடானாக் டெக் பார்க் வெஸ்ட் (StepWest) நோக்கி இடம்பெயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,950 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஐபிடெக் (Ibtec) தொழிற்பேட்டையை உருவாக்கும் ஜேலேண்ட் குழுமம், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டெப்வெஸ்ட்டில் மட்டும் 40 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை, டிசம்பர் 2 அன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அக்மல் அகமது தெரிவித்தார். ஜேலேண்ட், மாநிலத்தின் முதலீட்டு நிறுவனமான ஜோகூர் கார்ப்பரேஷனின் சொத்து மற்றும் உள்ளமைப்பு நிர்வாகக் கிளையாக செயல்படுகிறது.

ஐபிடெக்கில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஸ்டெப்ஈஸ்ட் (StepEast) தரவு நிலைய மையம் குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்த்துள்ளது. தற்போது வரை 11 சர்வதேச நிறுவனங்கள், 30 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளதாக அகமது கூறினார். இதில் சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அடங்கும்.

ஸ்டெப்வெஸ்ட்டில் 2 ஹெக்டர் முதல் 23 ஹெக்டர்வரை பரப்பளவுடைய 22 நிலத்தொகுதிகள் உள்ளன. முன்கூட்டியே அமைக்கப்பட்ட மின்சாரம், உயர் தர இணைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு போன்ற அம்சங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஐபிடெக் புதிய தொழில்நுட்பங்களை நேரடி சூழலில் சோதனை செய்து பார்க்கும் ‘புத்தாக்கச் சோதனை வளாகமாக’ உருவெடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தென்கிழக்காசியாவின் முன்னணி தரவு நிலைய மையமாக ஜோகூர் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here