மலேசிய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சாதன ஆணையத்தின் (MDA), தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முரளிதரன் பரமசுவா, 2026–2028 காலத்திற்கான உலகளாவிய ஒத்திசைவு பணிக்குழுவின் (GHWP) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. தாய்லாந்து பாங்காக்கில் டிசம்பர் 1 முதல் 4, 2025 வரை நடைபெற்ற 29ஆவது வருடாந்திர GHWP கூட்டத்தின் போது டாக்டர் முரளிதரனின் நியமனத்திற்கு பல்வேறு உறுப்பு நாடுகளின் அமைப்புகளிடமிருந்து ஆதரவு கிடைத்தது. GHWP என்பது 38 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அனைத்துலக அமைப்பாகும். இது உலகளவில் மருத்துவ சாதன விதிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1996இல் நிறுவப்பட்டதிலிருந்து GHWPஇன் உறுப்பினராக இருந்து MDA இருந்து வருகிறது.
இந்த நியமனம் மலேசியாவின் மருத்துவ சாதன ஒழுங்குமுறை நிபுணத்துவத்தையும் தலைமைத்துவத்தையும் அங்கீகரிப்பதோடு, கொள்கை உருவாக்கத்தில் விரிவான அனுபவமும் GHWP, ASEAN, APEC, IMDRF போன்ற அனைத்துலக தளங்களில் தீவிர பங்கேற்பும் கொண்ட டாக்டர் முரளிதரனுக்கு இந்த அமைப்பை வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீனா, ஜப்பான், கொரியா, சவுதி அரேபியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், எகிப்து, WHO போன்ற நாடுகளின் ஆதரவு, மலேசியாவின் மருத்துவ சாதன ஒழுங்குமுறை நிபுணத்துவத்தில் அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையை நிரூபிக்கிறது.
இந்த நியமனம் மலேசியாவிற்கு ஒரு வரலாற்று மைல்கல் என்பதோடு MDAக்கு கிடைத்த கௌரவமாகும். வலுவான தலைமையுடன், மலேசியா உலகளாவிய ஒழுங்குமுறை நிலப்பரப்பை வடிவமைப்பதிலும் தேசிய மருத்துவ சாதனத் துறையில் வளர்ச்சியை உந்துவதிலும் அதிக பங்கை வகிக்கத் தயாராக உள்ளது. இந்த நியமனம் மலேசியாவின் தேசிய ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை முன்னேற்றும் என்றும், அதை மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும், உலகளாவிய நடைமுறைகளுடன் ஒத்துப்போகச் செய்யும் என்றும் இறுதியில் நாட்டின் சுகாதார அமைப்புக்கு பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.










