புத்ராஜெயா:
WhatsApp, Tik Tok, Facebook, You Tube உட்பட அனைத்துப் பிரதான சமூக ஊடகங்களும் குறுஞ்செய்தித் தளங்களும் 2026 ஜனவரி 1ஆம் தேதி தொடக்கம் மலேசிய லைசென்ஸ் கட்டமைப்பின் கீழ் இயல்பாகவே பதிவாகிவிடும் என்று மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) அறிவித்துள்ளது.

மிகப்பெரிய அளவிலான இந்தச் சேவை வழங்குநர்கள் கிட்டத்தட்ட 80 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மலேசியப் பயனர்களைக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் சட்டம், செயல்பாட்டு முறைகளின் கீழ் இந்தத் தளங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நேர்மையை வளப்படுத்துவதும் உள்நாட்டுச் சட்டங்களுக்கு இணங்கச் செய்வதும் இந்த நடவடிக்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் இந்த ஒழுங்குமுறை ஒரே சீரான, பயனுள்ள வகையில் செயல்படுவதை இது உறுதி செய்கிறது.

Applications Service Providor Class (ASP(C) லைசென்ஸ் கீழ் இந்தப் புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது என்று MCMC அதன் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பயனர்களின் பாதுகாப்பைக் குறிப்பாக தீய உள்ளடக்கங்களில் இருந்து சிறார்களையும் குடும்பங்களையும் பாதுகாப்பதில் இந்த உலகளாவிய தகவல் தளங்கள் தெளிவான பொறுப்புகளை ஏற்பதை இப்புதிய விதிமுறை உறுதி செய்கிறது. இந்தப் புதிய சட்ட நடைமுறையானது மலேசியாவிற்குள் செயல்படும் தகவல் தளங்கள் மலேசியாவின் சட்டக் கட்டமைப்புகளுக்கு உட்பட்டு முறையாகவும் ஒரே சீராகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் என்று எம்சிஎம்சி கூறியது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர்கள் அவர்களின் உலகளாவிய தளத்தில் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படலாம் என்றும் எம்சிஎம்சி தெளிவுபடுத்தியது. தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு புதிய லைசென்சுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இச்சட்டத்தின் கீழ் இந்நிறுவனங்கள் அனைத்தும் ஒரே சட்டக் கட்டமைப்புக்குள் இயல்பாகவே பதிவு பெற்றுவிடும் என்றும் எம்சிஎம்சி விளக்கம் அளித்தது.

ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் தளங்கள் அவர்களின் நடப்புப் பதிவு காலாவதியானதும் புதிய விதிமுறைகளும் இயல்பாகவே அதன் செயல்பாட்டைப் பதிவு செய்துவிடும். இந்த அணுகுமுறையானது பெரும் அளவிலான ஆன்லைன் தளங்களை முறைப்படுத்தும் அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்பவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மலேசியாவில் அனைத்துப் பயனர்களுக்குமான ஆன்லைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படுவோம் என்று எம்சிஎம்சி அறிவித்துள்ளது.
2025 ஜூலை 1ஆம் தேதி 3 சமூக ஊடகத் தளங்கள் வெற்றிகரமாக ASP (C) லைசென்சுகளைப் பெற்றுள்ளன. லவி சாட் இண்டர்நேஷனல் பிரைவெட் லிமிடெட், டிக் டாக் பிரைவெட் லிமிடெட், டெலிகிராம் மெசஞ்சர்ஸ் இன் கார்ப்பரெட்டட் ஆகியவையே அந்த மூன்று நிறுவனங்களாகும்.




















