நாட்டில் சட்டவிரோத பயண முகவர்கள் அதிகரித்து வரும் வேளையில் அதுபோன்ற முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மலேசிய சுற்றுலா கலை கலாச்சார அமைச்சில் (MOTAC) வருகை தந்திருந்த கண்மணி உள்ளிட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர். #Legal Tourism என்ற ஹாஸ்டேக் என்ற கோட்பாட்டுடன் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மலேசிய இந்தியர் சுற்றுலா பயண சங்கத்தின் (MITTA) தலைவர் டத்தோ அருள்தாஸ் அருளானந்து தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் வெறும் விவாத மேடையாக மட்டுமல்லாமல் மாறாக இது ஒரு செயல்பாட்டு அழைப்பாகவும் இருந்தது. அதுமட்டுமன்றி MOTAC அமல்படுத்தியுள்ள அல்லது வரையறுக்கப்பட்டுள்ள அமைப்புகள் சட்ட நிபுணத்துவமாகவும் சட்டபூர்வ, தொழில்துறை பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து நடைமுறை தீர்வுகளை உருவாக்கும் மேடையாகவும் இது செயல்பட்டது என்று தனது உரையில் எடுத்துரைத்தார்.
உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டலையும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏதுவான ஆதரவையும் வழங்குவதே தலைவராக பொறுப்பேற்றுள்ள தமது முக்கியமான நோக்கமாகும். மேலும் பாதுகாப்பான நெறிமுறை பின்பற்றுதலும், நம்பகத்தன்மை மிகுந்த சுற்றுலா தலமாக மலேசியாவின் நற்பெயரை நாம் இணைந்து காக்க முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தமது உரையில் கூறினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா முகவர்கள், சட்ட நிபுணர்கள், பல்வேறு துறையை சார்ந்தவர்கள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா முகவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களை வழங்கினர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்தில் கண்டிப்பாக சுற்றுலா வழிகாட்டி இருக்க வேண்டும் என்பதனை MOTAC மீண்டும் வலியுறுத்தாகவும் மேலும் சட்டவிரோத பயண முகவர்கள் குறித்து புகார்கள் அளித்தால் மட்டும் போதாது என்றும் அதற்கான ஆதாரங்களையும் உடன் வழங்கினால் மட்டுமே சம்பந்தப்பட்ட தனி நபர் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் MOTAC அதிகாரிகள் தெரிவித்தனர்.










