ஜோகூர் பாரு:
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (JS-SEZ) மேற்கொள்ளப்படும் பாரிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள், ஜோகூர் மக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் எவ்வித சமரசத்தையும் ஏற்படுத்தாது என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார்.
JS-SEZ பகுதியில் மின்சாரத் தேவை கட்டுப்பாட்டில் உள்ளது. டிசம்பர் 2025 நிலவரப்படி, இங்குள்ள மின்சாரக் கொள்ளளவு 3,885 MVA ஆகும். ஆனால் தற்போதைய தேவை 1,272 MW (சுமார் 72.76%) மட்டுமே. இது பாதுகாப்பான இயக்க வரம்பிற்குள் உள்ளது.
அதிகரித்து வரும் தேவையை ஈடுகட்ட, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நான்கு முக்கிய மின்மாற்றி நிலையங்களை (PMU) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 9 கூடுதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் பொந்தியான் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய JS-SEZ பகுதிக்கான குடிநீர் நிலவரம்: தற்போதைய குடிநீர் உற்பத்தி நாளொன்றுக்கு 1,261 மில்லியன் லிட்டர்கள் (MLD).
சுமார் 227 MLD (15%) குடிநீர் கையிருப்பில் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
இஸ்கந்தர் புத்தேரி மற்றும் செடினாக் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த RM1.02 பில்லியன் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
2035-ஆம் ஆண்டு வரையிலான தேவையை முன்னிறுத்தி, 5 புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (WTP) மற்றும் ஆற்று நீர் தேக்கத் திட்டங்கள் (TAPS) செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் கூடுதலாக 1,100 MLD குடிநீர் உற்பத்தித் திறன் உருவாக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
தரவு மையங்கள் (Data Centres) மற்றும் கனரகத் தொழில்கள் போன்ற அதிக எரிசக்தி மற்றும் நீர் தேவைப்படும் முதலீடுகள், தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஆன் ஹபீஸ் காசி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மக்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி சமமாக முன்னெடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

























