அதிவேக நெடுஞ்சாலையின் நடுவே அமர்ந்து அட்டகாசம்: டிரெய்லர் ஓட்டுநர் மீது போலீசார் விசாரணை!

கோலாலம்பூர்:

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (NSE) நடுவே ஒரு நபர் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காஜாங் மாவட்ட போலீசார் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மதியம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர் ஒரு டிரெய்லர் ஓட்டுநர் என நம்பப்படுகிறது. அவர் தனது கனரக வாகனத்தை அவசர வழித்தடத்தில் (Emergency Lane) நிறுத்திவிட்டு, எந்த காரணமும் இன்றி நெடுஞ்சாலையின் முதல் வரிசையின் நடுவே அமர்ந்துள்ளார்.

இந்தச் செயல் அந்த நபரின் உயிருக்கு மட்டுமின்றி, அந்தச் சாலையில் பயணித்த பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.

இந்த வழக்கு போக்குவரத்திற்குத் தடையை ஏற்படுத்தியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 48(1), பிறர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக தண்டனைச் சட்டம், பிரிவு 336 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்குச் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here