ஏறத்தாழ 1 லட்சம் பக்தர்கள் புடைசூழ கோலா சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் தைப்பூசத் திருவிழா!

(டில்லிராணி முத்து)

கோலா சிலாங்கூர்:

இன்று கடுமையான வெப்ப நிலையாக இருந்த போதிலும் கோலா சிலாங்கூரிலிருந்து இரண்டரை மைல் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூசத் திருவிழா ஏறத்தாழ 1 லட்சம் பக்தர்கள் புடைசூழ மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.

110 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற இந்த கோலா சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் இவ்வாண்டு தைப்பூச விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்தாண்டுகள் போல் பக்தர்களை திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

சிலாங்கூர் மாநிலத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் ஆலங்களில் ஒன்றாக இந்த கோலா சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் திகழ்கின்ற நிலையில் இந்த ஆண்டும் பக்தர்கள் பக்தி பரவசம் கமழ பால்குடம், காவடிகள், தீச்சட்டி ஏந்தி வந்து தங்களின் நேர்த்திக் கடனை மன நிறைவுடன் செலுத்தினர்.

சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராயுடு இந்த தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தைப்பூசத் திருவிழாவிற்கு வருகைபுரிந்த பக்தர்களின் பாதுகாப்பிற்கும் வழிகாட்டலுக்கும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கி சிறப்பான முறையில் சேவைகள் ஆற்றிய கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல் துறைக்கும் ரேலா உறுப்பினர்களுக்கும் பொதுப்பணித்துறைக்கும் செம்பிறைச் சங்கத்திற்கும் கோலா சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் கண்ணதாசன் பரமசிவன் தம்முடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here