வங்காளதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா(78) இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா்.
அதன்பிறகு வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன..இந்த நிலையில், இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 சிறைத்தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு வீட்டுவசதி திட்டத்தில், அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவான நிலையில், நீதிமன்ற விசாரணையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன. ஷேக் ஹசீனா மட்டுமில்லாது, மேற்கண்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருடைய உறவினர்களான முஜீப் சித்திக், துலீப் ரிச்வானா சித்திக், ஆஸ்மினா சித்திக் மற்றும் பிறருக்கும் சிறைத்தண்டனை விதித்து தாக்கா சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன், அவர்கள் அனைவருக்கும் தலா 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.










