மணிலா,பா.ஜனதாவின் பைரேன்சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வந்த மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி, குகி இனத்தினருக்கு இடையே பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 260-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் பைரேன்சிங் பதவி விலகினார்.
இதையடுத்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டது. இந்த 2-வது ஜனாதிபதி ஆட்சிக்காலம் 12-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் அரசை அமைக்க பா.ஜனதா விரும்பியது. அதன்படி மாநிலத்தில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் ஆலோசனை நடந்தது.
இதில், சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக (முதல்-மந்திரி) கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தின் முன்னாள் மந்திரியான அவர், மெய்தி இனத்தை சேர்ந்தவர்.
அத்துடன் ‘குகி’ பழங்குடி இனத்தை சேர்ந்த முன்னாள் பெண் மந்திரி நெம்சா கிப்ஜென், துணை முதல்-மந்திரியாக தேர்வானார்.
புதிய அரசு அமைப்பதற்கு வசதியாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு ஒன்றுடன் லோக்பவன் சென்று மாநில கவர்னர் அஜய் குமார் பல்லாவை கெம்சந்த் சிங் சந்தித்தார். அப்போது மாநிலத்தில் ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட கவர்னர், கெம்சந்த் சிங்கை ஆட்சியமைக்க அழைத்தார்.
பின்னர் தலைநகர் இம்பாலில் உள்ள லோக்பவனில் புதிய அரசின் பத வியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில முதல்-மந்திரியாக கெம்சந்த் சிங்குக்கு, கவர்னர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. நெம்சா கிப்ஜென், நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ. டிகோ ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர். இதில் நெம்சா, டெல்லியில் இருந்து காணொலி மூலம் பதவியேற்றார். இவர்களை தவிர மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இந்த சூழலில் தான் , குகி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டத்தற்கு அதே சமுகத்தை சேர்ந்த குகி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள நெம்ச்சா கிப்ஜென் புகைப்படத்துடன், “துரோகி” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி குக்கி சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது, டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இம்பால், மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று மாலை இரண்டு பழங்குடியின குழுக்கள் கடுமையான கல் வீச்சில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது. லிட்டன் கிராமத்தில் மோதிக்கொண்ட குழுக்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், உக்ருல் மாவட்ட லிட்டன் கிராமத்தில் தங்குல் மற்றும் குகி சமூகத்தினரிடையே அமைதி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், இதுபோன்ற இடையூறுகள் அமைதிக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும், பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும், மேலும் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்” என்று கருதி உக்ருல் மாவட்ட நீதிபதி ஆசிஷ் தாஸ், 2023 ஆம் ஆண்டு BNSS இன் பிரிவு 163 இன் துணைப் பிரிவு 1 இன் கீழ் 63 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மீண்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற வெறும் நான்கு நாட்களே ஆன நிலையில், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.










