வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும்

கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,மார்ச் 23,-

கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தம் தருகிறது. நேற்று நடந்த மக்கள் சுய ஊரடங்கை கூட பலர் தீவிரமாக கடை பிடிக்கவில்லை.

கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு மிக கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக கடை பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவ விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா? என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்படியானால் தான் நாம் அதை கட்டுப்படுத்த முடியும். வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பண பரிமாற்றத்துக்கு டிஜிட்டல் மூலம் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது சமூகத்தில் இருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்குள் இருந்தால்தான் அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here