புதுடெல்லி,கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் 115 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குடியரசு நாடு செசல்ஸ். இந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பேட்ரிக் ஹெர்மைனி வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே, இந்தியா, செசல்ஸ் இருநாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பேட்ரிக் ஹெர்மைனி இந்தியா வந்துள்ளார்.
6 நாட்கள் பயணமாக பேட்ரிக் ஹெர்மைனி கடந்த 5-ந்தேதி இந்தியா வந்தார். விமானம் மூலம் சென்னை வந்த பேட்ரிக் ஹெர்மைனி, சென்னை மற்றும் மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அவர் டெல்லி சென்றார்.
டெல்லியில் செசல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மைனி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, செசல்ஸ் நாட்டின் வளர்ச்சிக்காக 175 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500 கோடி) நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவும், செசல்ஸ் நாடும் புவியியல் ரீதியாக மட்டுமின்றி, வரலாறு, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையாலும் இணைக்கப்பட்டுள்ளன.
செசல்ஸ் நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அந்த வகையில் செசல்ஸ் நாட்டின் வளர்ச்சிக்காக இன்று 175 மில்லியன் அமெரிக்க டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்துள்ளோம்.
இந்த தொகுப்பு சமூக வீட்டுவசதி, இயக்கம், தொழில் பயிற்சி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கான உறுதியான திட்டங்களை ஆதரிக்கும். இந்தியா-செசல்ஸ் உறவுகளின் மிகப்பெரிய பலம் நமது மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகும். செசல்ஸ் நாட்டில் குடியேறிய இந்திய சமூகம், அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.









