நாங்கள் நாட்டிற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கிறோம். ஆனால் அரசாங்கம் ஏன் எங்களை புறக்கணிக்கிறது என்று தங்களுக்கு தெரியவில்லை என்று பிரிஸ்மாவின் முன்னாள் தலைவரும் ஆலி மாஜு உணவக உரிமையாளருமான டத்தோ அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான்@ டத்தோ அலி மாஜு தனது மனக்குமுறலை தெரிவித்தார்.
அரசாங்கம் தற்பொழுது இந்திய உணவகங்கள், இந்திய முஸ்லீம் உணவகங்களுக்கு புதிய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற தகவல் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் அவர். நாங்கள் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டி தருகிறோம். வரி செலுத்துகிறோம். இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிப்படுகிறோம்.
அதே வேளை தொழிலாளர்கள் தாயகம் திரும்பி சென்றால் அவர்களுக்கான மாற்றுத் தொழிலாளர்களை பெறுவதிலும் உணவகங்கள் பிரச்சினையை எதிர்கொள்கின்றன. உதாரணத்திற்கு உணவகத்தில் இருந்து 10 தொழிலாளர்கள் வெளியேறினால் மாற்றாக எங்களுக்கு 5 அல்லது 6 தொழிலாளர்கள் மட்டுமே கிடைக்கின்றனர்.
மேலும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினையை நாங்கள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வருகிறோம். அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யும் என்று நினைத்த வேளையில் அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பு உணவகங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்து எங்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் என நம்புவதாகவும் டத்தோ அலி மாஜு தெரிவித்தார். உணவகங்கள் உள்ளிட்ட சில துறைகள் அதிகளவில் அந்நியத் தொழிலாளர்களை நம்பி இருக்கின்றன என்பது அரசாங்கத்திற்கு தெரியும் என்பதால் அதற்கேற்ப சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அலி மாஜு வேண்டுகோள் விடுத்தார்.










