பிரபல மின்னணு சாதன நிறுவனங்களான குக்கு (CUCKOO International), சம்சுங் மலேசியா (Samsung Malaysia Electronics) ஆகிய இரண்டும் இணைந்து, நுகர்வோருக்காகப் புதிய வாடகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த ஒத்துழைப்பின் கீழ், சம்சுங் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய துணி துவைக்கும் திறன் இயந்திரம் (Smart Washer Dryer), திறன் தொலைக்காட்சி, திறன் பலகை (ஸ்மார்ட் டேப்லெட்) ஆகிய மூன்று முக்கிய தயாரிப்புகள் முதன்முறையாக குக்கு நிறுவனத்தின் வாடகை முறையின் கீழ் பொதுமக்களுக்குக் கிடைக்கவுள்ளன.
சம்சுங் நிறுவனத்தின் ‘SmartThings’ தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன செயற்கை நுண்ணறிவு சாதனங்களை, ஆரம்பத்திலேயே அதிக பணம் செலுத்தி வாங்க முடியாத நுகர்வோருக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சோதனை முயற்சியாக நேரடி விற்பனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது குக்கு நிறுவனத்தின் பலமான ‘வாடகை முறை’யுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குக்கு மலேசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹோ கியான் சூன் கருத்து தெரிவிக்கையில், வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த வாடகைத் திட்டத்தை சம்சுங் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கூட்டு முயற்சிகள் மூலம் அதிக மதிப்பிலான சேவைகளை வழங்குவதே எங்களின் நோக்கம் என குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு ‘குக்கு கோ-கிரியேட்டட்’ (CUCKOO Co-Created) திட்டத்தின் கீழ் இந்த வாடகை முறையை விரிவுபடுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் சாமானிய மக்களும் உலகத் தரம் வாய்ந்த நவீன மின்னணு சாதனங்களைத் தங்களின் கட்டுப்படியாகும் மாதாந்திர வாடகையில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் ஹோ கியான் சூன் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் தெரிவித்தார்.
ராமேஸ்வரி ராஜா
எஸ். சண்முகம்










