ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து கச்சா எண்ணெயுடன் மும்பை வந்தடைந்த கப்பல்

மும்பை,அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் போர் உக்கிரமடைந்துள்ளது. மேலும் இந்த அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம், கியாஸ் வர்த்தகத்தை முடக்கும் வகையில் ஈரான் தனது ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.

தினமும் உலகளவில் ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், கியாஸில் 20 சதவீதம் இந்த பாதை வழியாக தான் பிற நாடுகளுக்கு செல்கிறது. கியாஸ் தட்டுப்பாடு குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இதனிடையே வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது.

இந்த ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நேற்று ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது

இதன் தொடர்ச்சியாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க ஈரான் சம்மதம் தெரிவித்தது. எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு அனுப்பலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது

ஈரானின் இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு எரிபொருள் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்தியா 45 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் பெரும்பாலும் இந்த ஜலசந்தியை கடந்தே இந்தியாவுக்கு வருகை தருகின்றன.

இந்நிலையில் ஈரானின் அனுமதியை பெற்று ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து 1,35,335 டன் கச்சா எண்ணெயை சுமந்து கொண்டு முதல் கப்பல் மும்பை வந்தடைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான லைபீரியா நாட்டு கொடியுடன் ‘ஷென்லாங்’ என்ற டேங்கர் கப்பல், மும்பை துறைமுகத்திற்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தது. முன்னதாக சவுதி துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து கச்சா எண்ணெய் இந்த கப்பலில் ஏற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here