இஸ்ரேல் தாக்குதல்; 2 வாரங்களில் 826 பேர் பலி: பேச்சுவார்த்தைக்கு முன்வந்த லெபனான்

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து, ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகிறது.

ஈரானின் ஆதரவை பெற்று செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 28-ந்தேதியில் இருந்து 2 வாரங்களில் 826 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர்.

இதனால், அதிகரித்து வரும் வன்முறைக்கு இடையே, இஸ்ரேலுடன் நேரடியாக அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட லெபனான் முடிவு செய்துள்ளது. எனினும், அதற்கு முன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால், தரை வழி போரில் இறங்க போகிறோம் என இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இதனால், 2006-ம் ஆண்டு போருக்கு பின்னர் பெரிய படையெடுப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், பேச்சுவார்த்தைக்காக தன்னுடைய ஆலோசகர் ரான் டெர்மரை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அனுப்பி வைத்துள்ளார்.

அமெரிக்கா தரப்பில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிகிறது. இதற்காக பாரீஸ் அல்லது சைப்ரசில் ஓரிரு நாட்களில் நேரடி ஆலோசைனை கூட்டம் நடத்தப்படும் என பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here