கோலாலம்பூர், மார்ச் 16:
மலேசியத் தலைநகரின் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும், மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவதை விட அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பகுதி) அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோலாலம்பூரின் போக்குவரத்து அடர்த்தியைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதியின் அவசியத்தை விளக்கினார்.
ஒரு நாளைக்குச் சுமார் ஒரு மில்லியன் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைகின்றன. இதனால் சாலைகள் விரைவாகப் சேதமடைகின்றன.
மற்ற மாநிலங்களுக்கு ‘மலேசிய சாலைப் பதிவு தகவல் திட்டத்தின்’ (Marris) கீழ் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், கோலாலம்பூர் நகர மன்றத்திற்கு (DBKL) சாலைப் பராமரிப்புக்காக அரசாங்கத்திடமிருந்து நேரடியாக 33 மில்லியன் ரிங்கிட் (சுமார் S$10.7 மில்லியன்) மட்டுமே வழங்கப்படுகிறது.
“தலைநகரின் சாலைகளை முறையாகப் பராமரிக்க இந்தத் தொகை போதுமானதாக இல்லை,” என்று அமைச்சர் ஹன்னா குறிப்பிட்டார். அண்மையில் நடைபெற்ற தேசிய நிதி மன்றக் கூட்டத்தில், இது குறித்துப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் விரிவாக விளக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





















