பேராக் சுல்தானுடன் சந்திப்பு: புதிய PERKESO மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து விளக்கம்!

ஈப்போ | மார்ச் 16, 2026:

பேராக் மாநிலத்தின் புதிய PERKESO மறுவாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் திறப்பு விழா குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க, பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா அவர்களை PERKESO அமைப்பின் பிரதிநிதிகள் குழு இன்று அரண்மனையில் சந்தித்துப் பேசியது.

பேராக் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய PERKESO மறுவாழ்வு மையத்தின் தற்போதைய நிலை குறித்து சுல்தான் அவர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த மையத்திற்குச் சூட்டப்பட வேண்டிய பெயர் மற்றும் அதன் திறப்பு விழாவுக்கான தேதி குறித்து சுல்தான் அவர்களின் மேலான ஆலோசனையும் அனுமதியும் கோரப்பட்டது.

மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் குறித்து சுல்தான் அவர்கள் காட்டிய அக்கறைக்கும், வழங்கிய ஆலோசனைகளுக்கும் PERKESO அமைப்பின் பிரதிநிதிகள் குழு நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

இந்தச் சந்திப்பில் அமைச்சக மற்றும் PERKESO அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர், இதில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பேராக் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் கலாச்சார மன்ற (MAIPk) தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமது அன்வார் ஜைனி, மனிதவள அமைச்சக(KESUMA) துணைச் செயலாளர் (கொள்கை மற்றும் சர்வதேசம்) டாக்டர் ஹாஜி முகமது ஷாஹரின் உமர், , PERKESO வாரிய தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமல், PERKESO வாரிய தலைமை நிர்வாக அதிகாரி, PERKESO மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர், டத்தோ டாக்டர் ஹபீஸ் பின் ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்களின் ஆரோக்கியம் மற்றும் மறுவாழ்வுத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், விரைவில் சுல்தான் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான் அவர்களின் வழிகாட்டுதல்கள் இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here