பிரதமர் மோடி திரும்பி சென்றதும் ஈரான் மீது தாக்குதல்… ஏன்? என்று இஸ்ரேல் தூதர் விளக்கம்

புதுடெல்லி பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்று விட்டு, இந்தியாவுக்கு திரும்பி சென்றதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்ற வகையில், பரவலாக பேசப்பட்டு வருகிது. பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், அதனை தொடர்ந்து ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் ஆகியவற்றின் காலகட்டம் பற்றி சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு கூட அந்த பகுதியில் சூழல் பதற்றத்துடனேயே இருந்தது. தாக்குதல் நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டபோது கூட, பிரதமர் மோடி திரும்பி சென்ற பின்னரே, தாக்குதலுக்கான சந்தர்ப்பம் வந்தது என்றார்.

இதில், இரு நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டவை அல்ல என அந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒப்புதல் அளிப்பது என்ற அமைச்சரவையின் முடிவு 2 நாட்களுக்கு பின்னரே வந்தது.

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, ஈரான் மீது படையெடுக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை. ராணுவ தாக்குதலை விட, உள்நாட்டு அழுத்தத்தின் அடிப்படையிலேயே, ஈரானில் உள்நாட்டு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றே தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டது என்று கூறினார். ஈரான் மக்களுக்கு ஒரு சூழலை நாங்கள் தர விரும்பினோம்.

அது என்னவென்றால், கொள்கையில் மாற்றம் வேண்டும் அல்லது ஆட்சியில் மாற்றம் வேண்டும் என மக்கள் உண்மையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை தரவே நாங்கள் விரும்பினோம் என்றார். இது நடக்குமா? அல்லது இல்லையா? என பார்த்தோம். அதில் கவனம் செலுத்தினோம்.

ஈரானிய மக்களுக்கு மட்டுமின்றி, இந்த பகுதியானது வருங்காலத்தில் அதிக ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்றும் குறிப்பிட்டார். ஏனெனில் நிலையான மேற்காசியாவால், வளைகுடா நாடுகளுக்கு பலன் ஏற்படுவதுடன், சர்வதேச சமூகத்திற்கும் பரவலாக பலன் கிடைக்கும் என்று கூறினார்.

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவருடன் உயர்மட்ட குழுவினரும் சென்றனர். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது 2-வது முறையாகும்.

இதன்பின்னர் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு ‘நெசெட் சபாநாயகர்’ பதக்கம் வழங்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இதனை வழங்கினார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கம் பெறும் முதலாவது இந்திய பிரதமர் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் ஆகிய பெருமைகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here