இறுதிச் சடங்கு சேவைகளை வழங்கும் நிர்வாணா ஆசியா குழுமம், தனது பல நினைவுப் பூங்காக்களிலிருந்து திருடப்பட்ட அஸ்திக்கலன்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், மீட்கப்பட்ட அஸ்திக்கலன்கள் “சரிபார்ப்பு, ஆய்வு மற்றும் முறையான மீளளிப்பு” பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட குடும்பங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மேலதிக விவரங்கள் இந்த நேரத்தில் வெளியிடப்படாது. தேவையான அனைத்து தொடர் நடவடிக்கைகளும் கவனத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் கையாளப்படுவதை உறுதிசெய்ய, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் தொடர்ந்து நேரடியாகத் தொடர்புகொள்வோம்.
இந்த அஸ்திக்கலன் திருட்டுகள் தற்செயலான அல்லது தனிப்பட்ட செயல்களாகத் தெரியவில்லை என்றும், மாறாக அவை முன் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டவை என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், ஹாங்காங் மற்றும் தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இறுதிச் சடங்கு நிறுவனங்களைக் குறிவைத்து இதேபோன்ற குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும், அவை அப்பகுதியில் செயல்படும் கம்போடிய மோசடிக் கும்பல்களுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுவதாகவும் அது கூறியுள்ளது. இந்தக் கொடூரமான கடுமையான குற்றச் செயல்களாகும், மேலும் இறந்தவர்களின் கண்ணியத்தையும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளையும் கடுமையாக மீறுவதாகும்.
இனிவரும் காலங்களில், இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கும், துக்க நிவாரண சேவைத் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும், நாங்கள் காவல்துறை மற்றும் தொழில் துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்.
நீலாய் நினைவுப் பூங்காவின் அஸ்திக்குடில் ஒன்றிலிருந்து, மனித அஸ்தி அடங்கிய 30 கலசங்கள் திருடப்பட்டதாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதை நிலாய் காவல்துறைத் தலைவர் ஜோஹரி யாஹ்யா உறுதிப்படுத்தியதாக செவ்வாயன்று பெர்னாமா செய்தி வெளியிட்டது. ஒரு சர்வதேச எண்ணிலிருந்து கல்லறை நிர்வாகத்திற்கு அழைப்பு வந்ததாகவும், அழைத்தவர் கலசங்களுக்கு ஈடாகப் பணயத்தொகை கோரியதாகவும் அவர் கூறினார்.
திருட்டு, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கல்லறைத் தோட்டத்தில் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மார்ச் 6 அன்று நீலாயில் உள்ள நினைவுப் பூங்காவிலிருந்து 20க்கும் மேற்பட்ட அஸ்திக்குடங்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.









