வங்சா மாஜுவில் 4 வாகனத் திருட்டுக் கும்பல்கள் முறியடிப்பு: 21 பேர் கைது; 24 வாகனங்கள் மீட்பு!

கோலாலம்பூர் | மார்ச் 26, 2026

வங்சா மாஜு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு முக்கியக் கும்பல்களைக் காவல்துறையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

வங்சா மாஜு மாவட்டக் காவல்துறைத் தலைமையகம் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் லெஜாங் காஸ் (Op Lejang Kas) 1/26’ என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது குறித்து வங்சா மாஜு மாவட்டக் காவல்துறைத் தலைவர் மூத்த துணை ஆணையர் முகமட் லஸிம் இஸ்மாயில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக 20 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வயது 33 முதல் 50-க்குள் இருக்கும்.

இவர்களிடமிருந்து மொத்தம் 24 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் நான்கு வாகனங்கள் ஏற்கனவே அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. ‘பிரகாஷ்’, ‘இகான்’, ‘கோபிஸ்’ மற்றும் ‘போட்டாக் குவாங்’ ஆகிய நான்கு கும்பல்களே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையில் இந்தக் கும்பல்கள் குறித்துப் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன: இவர்கள் வங்சா மாஜு, கோம்பாக், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

ஒரு மாவட்டத்தில் திருடும் வாகனங்களை, போலீசாரிடம் சிக்காமல் இருக்க உடனே மற்ற மாவட்டங்களுக்குக் கடத்திச் செல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருடப்பட்ட வாகனங்களுக்குப் போலிப் பதிவு எண்களைப் பொருத்தியோ அல்லது அவற்றைத் தனித்தனி உதிரி பாகங்களாகக் கழற்றியோ இணையம் வாயிலாக விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர்ப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஐவர் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிலர் மேல் விசாரணைக்காகப் பிற மாவட்டக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை சுமார் 4,109 நபர்களிடமும், 10 வாகனப் பட்டறைகளிலும் சோதனையிட்டதுடன், 3,157 வாகனங்களையும் தணிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here