ஈரானின் வான், கடல் படைகள் தலைமை… அனைத்தும் போய் விட்டன – டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி.அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும்.

அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார். ஆனால் ஈரானோ, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசிய விசயங்களை வெள்ளை மாளிகை செய்தியாக வெளியிட்டு உள்ளது. அதில் டிரம்ப் பேசும்போது, 2-ம் உலக போருக்கு பின்னர் வெளிநாட்டு கடற்படை ஒன்று தகர்க்கப்பட்டு உள்ளது. ஈரானின் கடற்படை மூழ்கடிக்கப்பட்டு விட்டது. அவர்களுடைய விமான படையும் போய் விட்டது. அவர்களுடைய விமானங்களை தாக்கி அழிக்கும் சாதனங்கள் மற்றும் தொலைதொடர்பு திறன்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டு விட்டன.

அவர்களுடைய அனைத்து தலைமையும் முடிந்து விட்டது. முதல் மட்டத்தில் இருந்த எல்லாமும் போய் விட்டன. அவர்கள் புதிய மட்டத்திலான தலைமையை தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளனர். அதற்கான வேலையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் போய் விட்டனர். ஏனென்றால், அவர்கள் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை.

அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். உண்மையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.. பி-2 விமானங்களை கொண்டு நாங்கள் அப்போது அவர்களை தாக்கவில்லை என்றால், அணுசக்தியை அவர்கள் வைத்திருப்பார்கள். எந்தவித கேள்வியே இல்லாமல் அதனை பயன்படுத்தி தாக்கியிருப்பார்கள் என டிரம்ப் கூறினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், நேட்டோ மீது நாங்கள் அதிருப்தியில் இருக்கிறோம். ஏனெனில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்களை பாதுகாக்க நாங்கள் ஓடோடி வந்தோம். ஆனால், எங்களுக்காக அவர்கள் ஒருபோதும் வரவேயில்லை என்றும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here