நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் 1.72 கோடி தொழிலாளர்களை கொண்டாடும் வகையில் மனிதவள அமைச்சு ‘தொழிலாளர்கள் கெசுமா வர்க்கத்தினர்’ எனும் மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த கொண்டாட்டம் புக்கிட் ஜாலில் யூனிஃபை அரங்கில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னோட்ட நிகழ்வை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை 1.72 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் 3% எனும் நிலையில் குறைந்துள்ளது. இது நாட்டின் வலுவான பொருளாதாரத்தை காட்டுகிறது. அதோடு, நாட்டிலுள்ள 1.64 மில்லியன் கிக் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டம் 872 அவர்களின் வாழ்வாதா த்தைப் பாதுகாப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் அவர்களுக்கான உரிமையையும் இச்சட்டம் பாதுகாக்கிறது.
அதோடு, தற்போதைய பிரசவ கால விடுமுறையை ஒரு மாதக் காலத்திற்கு நீட்டிக்கும் திட்டத்தை பெர்கேசோ அமல்படுத்தவுள்ளது. இது இளம் தாய்மார்களுக்கு ஆக்கப்பூர்வ திட்டமாக அதைந்துள்ளது என்று சுபாங் செளஜானா ஹோட்டலில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்வில் உரையாற்றும்போது டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார். மேலும் தொழிலாளர்களுக்கான கொண்டாட்ட நிகழ்வு புக்கிட் ஜாலில் மட்டுமல்லாது சுங்கை பூலோ, ஈப்போ, பத்து பஹாட், கோலத்திரங்கானு, கோத்தா சமாஹாரான், சண்டாக்கான் ஆகிய பகுதிகளிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த முன்னோட்ட தொடக்க நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










