936 ஆபாசக் காணொளிகளும் 4,035 ஆபாசப் படங்களையும் வைத்திருந்த மாணவர் கைது

சரவாக்கின் பாவ் நகரைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவரின் கைப்பேசியில் 936 ஆபாசக் காணொளிகளும் 4,035 ஆபாசப் படங்களும் இருந்ததைத் தொடர்ந்து, அவர் இன்று கைது செய்யப்பட்டார். வருமானத்திற்காக இந்தப் பொருட்களை விற்றதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டதாக பாவ் காவல் துறைத் தலைவர் ஹைடே ரஹ்மான் கூறியதாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர், வயது வந்தோர் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்கள் அடங்கிய இணையதளங்களை அணுகி, டெலிகிராம் வழியாக அவற்றை விற்று, சமூக ஊடகத் தளங்களிலும் அவற்றை விளம்பரப்படுத்தியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். மேலும், அந்த மாணவரிடமிருந்து மூன்று கைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் பல சிம் கார்டுகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது.

பாலியல் சுரண்டல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும், குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்டவற்றில், காவல்துறை சமரசம் செய்துகொள்ளாது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹைடே கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292-இன் கீழ், ஆபாசப் பொருட்களை விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்காக அந்தப் பதின்வயது மாணவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், 2017-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ், குழந்தை ஆபாசப் படங்களை விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்காகவும், அதே சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ், குழந்தை ஆபாசப் படங்களைப் பயன்படுத்துதல் அல்லது அணுகுதல் ஆகிய குற்றங்களுக்காகவும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு உதவுவதற்காக அந்த மாணவர் ஏழு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here