ஈப்போ: கெரிக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நேற்று பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாலை 5.57 மணிக்கு தங்களுக்குப் புகார் வந்ததாக கெரிக் காவல் நிலையத் தலைவர் அப்துல் சமாத் ஒத்மான் கூறினார்.
விசாரணையில், பிற்பகல் 3.33 மணிக்கு, பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 25 வயதுப் பெண், ஜிப் திறக்கப்படுவது போன்ற சத்தத்தைக் கேட்டதாகத் தெரியவந்தது என்று அவர் கூறினார். அவர் சென்று பார்த்தபோது, சந்தேக நபர் தன்னைப் பார்த்தபடியே ஒரு தகாத செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். புகார்தாரர் இந்தச் சம்பவத்தைத் தனது கைப்பேசியில் பதிவுசெய்து, சந்தேக நபரைத் திட்டினார். அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக பல்பொருள் அங்காடியை விட்டு வெளியேறினார்.
கெரிக் காவல்துறையினர் 55 வயதான அந்த நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். மேலும் விசாரணைகளை எளிதாக்குவதற்காக இன்று அவரைக் காவலில் வைக்க உத்தரவு கோரப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 மற்றும் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. வேலையில்லாத மற்றும் திருமணமாகாத அந்தச் சந்தேக நபர், மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்ததாக சமத் கூறினார். அவர் இரவு 9.45 மணிக்கு கெரிக் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.









