புக்கிட் மெர்தாஜம்: தனது மூன்று குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயின் வாகனம் கல் சுவரில் மோதியதில் படுகாயம் அடைந்தார், மேலும் அவரது இரண்டு வயது மகன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம், இங்குள்ள ஜாலான் சோங் பான் கெங் சாலையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) காலை சுமார் 7.45 மணியளவில் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிச் சென்று சாலையோரத்தில் இருந்த கல் தடுப்பில் மோதியதாக செபெராங் பெராய் தெங்கா காவல் நிலையத் தலைவர் உதவி ஆணையர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார். 30 வயதான உள்ளூர் பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் தலையில் காயமடைந்தனர்.
புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தக் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏழு வயதுக் குழந்தை சிறு காயங்களுடன் தப்பியது, ஐந்து வயதுக் குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த நேரத்தில், தாய் தனது மூத்த பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து சென்றதாக நம்பப்படுகிறது.









