சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவு தொடர்பாக, பினாங்கு, புக்கிட் மெர்தாஜமில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார், ஆட்சேபனைக்குரிய அந்தப் பதிவு மே 2 அன்று “லூகாஸ் லியாம்” என்ற முகநூல் கணக்கிலிருந்து வெளியிடப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், குமார் அந்தப் பதிவின் விவரங்களை வழங்கவில்லை.
நாடு முழுவதும் 12 காவல் புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணக்கின் உரிமையாளர் என நம்பப்படும் நபரை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அடையாளம் கண்டதன் உதவியுடன் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குமார் கூறினார்.
இரண்டு கைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபரை நீதிமன்றக் காவலில் வைக்க காவல்துறை விண்ணப்பிக்கும் என்று குமார் கூறினார். தேசத்துரோகக் குற்றம் மட்டுமின்றி, அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலும் காவல்துறை அவரை விசாரித்து வருகிறது.









