கோலாலம்பூர்:
பத்து (Batu) மற்றும் ஜின்ஜாங் (Jinjang) வெள்ளத் தடுப்புக் குளங்களின் நிலப்பரப்பு 70 விழுக்காடு வரை சுருங்கிய விவகாரம் குறித்து முழுமையான விளக்கத்தைப் பெற, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (MACC) இந்த வாரம் ஒரு உயர்மட்ட அவசர சந்திப்பை மேற்கொள்ளவிருப்பதாகப் பிரதமர்துறை (கூட்டரசு பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இக்குளங்களின் எல்லைக்குள் இருந்த 17 நிலப்பகுதிகள் தனியார் வீடு அமைப்பு மேம்பாட்டாளர்களுக்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இந்த நிலப்பரிமாற்றங்களில் ஊழல் கூறுகள் எதுவும் இல்லை என்ற ஆணையத்தின் முந்தைய அறிக்கையில் தமக்குத் திருப்தி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் நிலச் சுரங்க அலுவலகம் ஆகிய முக்கிய அமைப்புகளை உள்ளடக்கிய இந்த விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு, எஞ்சிய நிலப்பகுதிகளுக்கான அனைத்து மேம்பாட்டு அனுமதிகளையும் உடனடியாக முடக்குவதற்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர், இதுகுறித்த விவரங்கள் பின்னர் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் இன்று செய்தியாளர் சந்திப்பில் உறுதியளித்தார்.





















